உன்னை அறிந்தால் -பாகம் -4
"என்னடா ....மோகன் ?இங்கே என்ன பண்ணுற? இன்னைக்கு வேலைக்கே வரவில்லையே நீ? " என்று தனக்கு அருகில் இருந்து கொண்டு தன்னிடம் துருவித் துருவி கேள்வி கேட்க ஆவலாகக் காத்திருந்த தன் உயிர் நண்பனை மடக்கும் முகமாக அவனை முந்துவதாக நினைத்துக் கொண்டு அவனையே கேள்வி கேட்டான் நந்தகோபால்.
ஆனால் மோகன் அதற்கு அசைபவனாகவே தெரியவில்லை."அடே என்னைப் பற்றி அப்புறம் சொல்றேன்.எனக்கு ஒரு அவசரமான வேலை பக்கத்து கட்டிடத்திலே இருந்தது அதுதான் என்னோட கார் "இன்சூரன்ஸ்" (INSURANCE)பற்றியது.அதுதான் .அம்மாவை" ரைடு" கேட்டு வந்திறங்கினேன் .அது இருக்கட்டும்.உன் னைப் பற்றி இப்போ சொல்லு மச்சான் "என்று இவனைப் போட்டு அரித்தான்.
நந்தகோபாலுக்கு மோகனைப் பற்றி நன்றாகத்தெரியும்.ஒரு விடயத்தை அறியவேண்டு மென்று அவன் நினைத்தானோ அவ்வளவுதான் அதை அக்கு வேறு ஆணி வேறாக,அலசி ஆராய்ந்து முடிவு காணும் மட்டும் விடமாட்டான்
என்பது."சரி உனக்கு என்ன தெரிய வேணும் இப்போ?" என்று மோகனை அதட்டாத குறையாக கேட்டான்.அதற்கு பதில்"ஓ! அப்படி தெரிஞ்சு கொள்ள வேண்டி அளவுக்கு போயிடுச்சோ " என்று மீண்டும் கேலி பண்ணினான்.
இந்தத் தடவை நந்தகோபாலுக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது".டேய். உனக்கு தெரிய வேண்டிய விஷயம் ஒண்ணுமில்லைடா நீ என்னவோ எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு என்னை போட்டு வறுத்துக் கொட்டறையே!.இப்போ சொல்லு ! இப்போ உன் வீட்டுக்கு போறாயா இல்லை என்னோட என் வீட்டுக்கு வருறாயா? என்று மோகனைப் பேசவிடாமல் மடக்கினான்.மோகனுக்கு நந்தகோபாலின் கோபம் புரிந்து கொண்டது போல'
“ சரி சரி கோபிச்சு கொள்ளாதே நந்தன் .எனக்கு என்னமோ உன்னை கேட்க வேணு மென்னு தோணிச்சுது அதுதான் கேட்டேன் " என்று சமாளித்தான் .ஆனாலும் அவனுக்கு இத்தனை நாள் பழகிய தனது நண்பன் நந்தனின் முகத்தில் உள்ள ஏதோ ஒரு மாற்றம் மனதில் குறு குறுத்துக் கொண்டுதான் இருந்தது .அதையும் புரிந்து கொண்ட நந்தன் தான் என்ன விதமாக தன் நண்பனுக்கு மனதில் உறுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விடயத்தை போட்டு உடைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே அவனை நன்றாக ஒருமுறை அளப்பது போலப் பார்த்தான்.
சாப்பிட்டியா ? இரண்டு பேரும் ஒரு காப்பி குடிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம் "என்று கூறிக் கொண்டே போகும் வழியில் வந்த கனடாவில் பிரசித்தி பெற்ற
"டிம் ஹோர்டன் " காப்பிக் கடையின்(
TIM HORTON )கார் தரிக்கும் இடத்துக்குள் காரைத் திருப்பினான்.
நந்தனும்,மோகனும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒன்றாக வளர்ந்த நண்பர்கள்.இந்தியாவில் இருந்து இருவரதும் பெற்றோருமே ஒரேகாலத்தில் வேலை நிமித்தம் கனடாவுக்கு வந்து குடியேறியவர்கள்.இருவரதும் தாய் நாடு.இந்தியத் தமிழ் நாடாக இருந்தாலும் இருவரது பெற்றோருமே ஆபிரிக்க நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவுக்கு வந்தவர்கள் தான்.இதனால் அவர்களது எண்ணங்கள் ,நோக்கங்கள்,பிரயாசைகள் எல்லாம் ஒரேமாதிரியாகவே இருந்தன.நந்தனின் பெற்றோருக்கு நந்தன் ஒரே செல்லப் பிள்ளை.மோகனுக்கோ இரண்டு பெண் சகோதரங்களும் உண்டு.கல்யாணம் செய்து கொண்டு ஒருத்தி "வான்கூவரிலும்"(VANCOVER) மற்றவள் "மொன்ட்ரிஆலிலும்”(MONTREAL) வசிக்கிறார்கள்.பார்க்கப் போனால் இந்த இரண்டு நண்பர்களும் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளைகள் மாதிரித்தான்.
நந்த கோபால்
கேட்ட கேள்விக்கு மோகன் பதில் கூறாமல் தான் அறிய வேண்டிய விடயம் இருப்பது போல உணர்ந்து
கொண்டு அவனும், பதிலுக்கு "மச்சான் நான் உன்னோட" பெஸ்ட் பிரண்டு "( BEST FRIEND) நீ ஏதாவது சொல்லோணும்னா
சொல்லன்டா. உனக்குள்ள வைச்சு குமுறாதே." என்று ஆறுதல் படுத்துவன் போல அவன் தோளில் தட்டிக் கொடுத்தான்.
அவனது வார்த்தைகளில் இருந்த ஒரு உரிமை,அவனது குரலில் இருந்த ஒரு இதம் நந்தனை சிந்திக்க வைத்ததென்றே சொல்லலாம்.மோகனை ஒருமுறை பார்த்து பெரு மூச்சு விட்ட நந்தன் "சரி உன் கிட்ட மறைக்க ஒண்ணுமில்லைடா சொல்லிடறேன் ஆனால் இந்த விடயம் எந்தக் காரணம் கொண்டும் யாருக்கும் தெரிய வேண்டாம் சரியா?என்று ஒரு நிபந்தனையையும் மோகனுக்கு விதித்த நந்தன் காப்பியை வாங்கிக் கொண்டுவருவதற்காக ,மோகனை ஒருமேசையைச் சுற்றி போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு காப்பி விநியோகிக்கும் இடத்தை நெருங்கியவனுக்கு இன்னொரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.......!
தொடரும்......!

No comments:
Post a Comment