Wednesday, January 27, 2016

UNNAI ARITHAAL CHAPTER-3

UNNAI ARINTHAAL-CHAPTER-3


உன்னை அறிந்தால் ........! பாகம் -3
கார் தரிக்கும் இடத்தை வந்து சேர்ந்த நிலாவுக்கு காத்திருந்த அதிசயம் வேறு மொன்றுமில்லை. அங்கே பனியால் மூடிக்கிடந்திருக்கும் பல வண்டிகளுக்கு மத்தியில் நின்ற இவளது காரை மிகவும் பக்குவமாக துடைக்க தொடங்கியிருக்கும் நந்த கோபாலை மீண்டும்  கண்டதுதான். இவள்  வருவதைத் தெரிந்தும் தெரியாவன் போல அவன்  மிகவும் மும்மரமாக காரின் மேல் கூரையில் படிந்து போய்க் கிடந்த பனிக் குவியலை அகற்றிக் கொண்டு இருந்தான்."இவன் ஏன் என்னோடைய வண்டியை துப்பரவாக்குகிறான்" என்று மனதுக்குள் ஆச்சரியப் பட்டவளாக அவள் தனது வண்டியை நெருங்கினாள்.அவளது வண்டியோ, இது  அவளுடைய வண்டி தானோ  என்று அவளே  சந்தேகம் கொள்ளும் விதமாக பனியால் முற்றாக மூடி இருந்தது.குத்து மதிப்பில் தான் இவளும் அதை நெருங்கி சென்றாள்.கனடாவில் இந்தக் காட்சிகள் எல்லாம் ஒருநாள் முழுதும் கனத்த பனிப் பெய்யும் போது சகஜமாகக் காணும் காட்சிகளே.அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் தமது வண்டிகளை வெளியில் நிறுத்தும் போது இப்படியான சங்கடங்களை  அனுபவிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.மிகவும் பிரசித்தி வாய்ந்த  நவீன வசதிகள் உள்ள  அலுவலகங்கள் பல தமது கட்டிடங்களின் கீழேயே கார் தரிப்படங்களையும் சேர்த்து கட்டி இருப்பார்கள் ஆனால் நிலா வேலை புரியும் வங்கி, நகரத்தில் இருந்து தூரமாக இருப்பதாலும், இந்த மாதிரியான அசௌகரியங்களை ,பனிக் காலங்களில் அனுபவித்தேயாக வேண்டி இருந்தது.
மிகவும் காரை நெருங்கியதும் இவளை அப்போதுதான் கண்டவன் போல இவளைப் பார்த்து அழகாகச் சிரித்த நந்தகோபால் ,"என்னுடைய காரும் பக்கத்திலே தான் நிக்கிறது அதுதான்..."என்று ,இவளது கவனத்தைத் தன பக்கம் இழுப்பதற்கு முயல்பவன் போல வார்த்தைகளை  இழுத்தான்...!"நான் தான் இந்த உதவியைக் கேட்கவில்லையே "என்று கேட்கப்போனவள்  போல அவனை வியப்புடன் பார்த்தபடியே "இட்ஸ் ஓகே " ( its ok ) என்று அவனைப்  பார்த்து முறுவலித்த நிலா பிறகு அவனுடைய உதவியுடன் தனது காரின் மேல் கொட்டி இருந்த பனி முழுவதையும் ஒருமாதிரி சுத்தமாக்கிக் கொண்டு புறப்பட்டாள்.காரைத்துப்பரவாக்கும் வரையும் இருவருமே ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவேயில்லை.மிகவும் விசித்திரமாக இருந்தது அவர்களது செய்கை.ஏதோ சக ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்பவர்கள் போல பாவனை நடந்தது .
நந்தகோபால் அடிக்கடி அவளை பார்த்து ஏதோ கேட்கத்துடிப்பவன் போல இருந்தான் .ஆனால் நிலாவோ அதைப் பற்றியே கண்டு கொள்ளாதவளாக முழு மூச்சாக அவனது உதவியுடன் காரைத் துப்பரவாக்கும் வேலையை  மட்டும் முடிந்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் காணும் என்பது போல இயங்கிக் கொண்டிருந்தாள்.ஆனாலும் உள்ளத்துக்குள் "இவனுக்கு ஏன் இந்தக் கரிசனை தன காரைத் துடைத்துக் கொண்டு போகவேண்டியதுதானே "என்ற குறு குறுப்பு இருக்கத் தான் செய்தது .கடைசியில் "தேங்க்ஸ் வெரி மச் " (Thanks very much)என்று  அவனைப்  பார்த்துச்   சொல்லிவிட்டு  புறப்பட்டதுடன் அவளது பிரதிபலிப்பு , நந்தகோபாலுக்கு  மிகவும் ஏமாற்றமாக இருந்தது போலிருந்தது..
ஆனாலும் அவன் அதை முகத்தில் பெரிதாகக் காட்டிக் கொள்ளாது  ஒரு புன்னகையுடன்" இட் இஸ் மை ப்ளெஷர்” ( it is my pleasure  ) என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே அவன் தனது வண்டியை, சுத்தமாக்கும் வேலையில் இறங்கினான்.
இந்த இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த புதிய கரிசனையும் ,கவனமும் இவர்களைத் தவிர அங்கு வேலை செய்யும் இன்னொரு நபருக்கும் புதிராக இருந்தது .
அது வேறு யாருமில்லை.'என்ன மச்சான் ஆளை ஒருமாதிரி உன் பக்கம் பார்க்க வைச்சாய் போல" என்று கேட்டுக் கொண்டே வந்த நந்தகோபாலின் நண்பன் மோகனேதான்.இவனைக்   கொஞ்சம் கூட அந்த இடத்தில் எதிர் பார்க்காதவன் போல நந்தகோபால்"ஏண்டா  நீயிங்கே எப்படி? யாரைபார்க்க வைச்சேன்னு  கதை அளக்கிறாய் ?"  என்று பதில் கூறிய நந்தகோபாலை குறும்பாகச் சீண்டிய மோகன் "பார்த்தேன் பார்த்தேன் யாரை நீ பார்க்க வைச்சேன்னும்  பார்த்தேன் மச்சி " என்று கூறிக்கொண்டே விழுந்து விழுந்து சிரித்தான்.நந்த கோபால் இதைக்கேட்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாலும் பிறகு சம்மாளித்துக் கொண்டு "என்னடா உளர்றாய்" என்று கோபமாக கூறி மோகனை மடக்க முயன்றான்.  ஆனால் மோகனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு தெளிவு நந்தகோபாலை அதிகம் பேசாமல் செய்துவிட்டது."அது வந்து மச்சான் ...ஒண்ணுமில்லை....! " என்று வார்த்தைகள் இழுக்கவே மோகன் அவன் தோளில் கையைப் போட்டு சமாளித்து இவனிடம் இருந்து சில உண்மைகளை வரவழைக்க முயன்றதாகத் தெரிந்தது.....இருவரும் காரைத் துப்பரவாக்கிக் கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தனர்.மோகன் "சரி சொல்லு மச்சான் ..".என்று தொடங்கினான்....!
தொடரும்.........!



 
.

No comments:

Post a Comment