Wednesday, January 27, 2016

UNNAI ARINTHAAL....CHAPTER-2

UNNAI ARINTHAAL-CHAPTER-2

உன்னை அறிந்தால்.............பாகம் -2
பனியில் சறுக்கி  விழுந்த நிலாவின் ஆச்சரியத்துக்கு காரணம் வேறொன்றுமில்லை.இத்தனை நாளாக ,அவள் அந்த வங்கியில் வேலை பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே இன்னொரு பிரிவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் நந்தகோபால் தான்.இவளைக்  கண்டாலே ஒருவிதமாக  நோட்டம் விட்டுவிட்டு முகத்தை எப்போதுமே திருப்பிக் கொண்டு போகும் நந்தகோபால் தன்னைக் காப்பாற்ற வந்தானா என்பது  அவளுக்கு நம்பவே முடியாமல் இருந்தது.
தனது  சமநிலையைச் சுதாரித்துக் கொண்டு அவள் எழுந்து  நின்றபோது "என்னங்க பார்த்துக் காலை வைக்கிறது இல்லைங்களா?"என்று அவனது கட்டைக் குரலில்  கேட்டு வைத்தான்.அவனது சுத்த மான ,இந்தியத் தமிழனின் குரல் அவளுக்கு புதிதாக இருந்தது.எப்போதுமே ஆங்கிலத்தில் அவன் நண்பர்களோடு
அரட்டை அடிப்பதை வேலையில் அதுவும் சாப்பாட்டு அறையில் கண்டிருக்கிறாள்.கேட்டு இருக்கிறாள்.
இதுவே முதல் முறையாக அவன் தமிழ் பேசிக் கேட்டாள்.அதுவும் இந்தியத்தமிழ்.
அவனுக்கு ஆங்கிலத்திலேயே "தேங்க்ஸ்(Thanks) என்று கூறிவிட்டு ஆடையில் ஒட்டிக் கொண்டு  இருந்த பனிப்பஞ்சுகளை தட்டினாள்.நந்தகோபால் அவளின் செய்கைகளை  அவதானித்துக் கொண்டு  ஏதோ சொல்லுவதற்கு ஆயத்தமானான்.
"ஆர் யு  ஓகே நொவ் "(Are you ok now?)என்பதுதான் கேள்வி".ம்ம்ம் ரொம்ப நன்றி " என்று இப்போது தமிழில் பதிலளித்தாள்.அவனும் அதைக்கேட்டு புன்னகைத்து விட்டு "நீங்களும் தமிழ் பேசுவீங்களா" என்று கேட்டான்.அவனது கேள்வியில் ஏதாவது கேலி இருக்குமோ என்று நினைத்தவளாக தனது அழகான விழிகளை உருட்டி அவனை ஒருமுறை ஆச்சரியத்துடன் பார்த்தாள் நிலா.
இவளின் தயக்கத்தை உணர்ந்தவன் போல அவன் தயங்கிக் கொண்டே "இல்லைங்க சும்மா கேட்டேன் அதுதான்" என்று மழுப்பினான்.அவனது உண்மையான நோக்கம் அவளுக்கும் புரியவில்லை.ஆனாலும் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் தன்னை பிழையாகப் புரிந்து கோலாப் போகிறானே என்ற ஏதோ ஒரு ஆதங்கத்தில் " நல்லாப் பேசுவேன் " என்றாள்.அவளது பதிலிலும் அவளது குரலிலும் ஏதோ புதுமை கண்டவன் போல சிரித்தவன்,பின்னர் ஒருமாதிரி அவளிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனது கார் தரித்த இடத்துக்கு அவள் முன்னாள் நடந்தான்.அவள் அவனுக்கு பின்னால் இரண்டு அடிதூரம் இடைவெளி இருக்க நடந்து சென்றாள்.
முன்னாள்   கம்பீரமாக தனது உயரமான உடற்கட்டோடு ,ஒருவிதமான பயமும் இல்லாமல் விழுந்திருந்த பனியில் நடந்து செல்லும் அவனைப் பார்க்க நிலாவுக்கு உண்மையிலேயே பொறாமையாக இருந்தது.
அவள் அவனுக்குப் பக்கத்திலே நடக்காமல் போனதுக்கு காரணமும் இருந்தது.இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்வதால் கார் தரிப்பிடம் ஒரே இடத்தில்தான் இருந்தது.அவனோடு சேர்ந்தே சென்று இருந்தால் அங்கு போய்ச் சேரும் வரையாவது இவள் மறுபடியும் இந்தப் பனியில் சறுக்கியிருந்தாலும் இன்னொரு முறை அவன் உதவி கிடைத்திருக்கும்.
ஆனாலும் இவளுக்கு அவனின் உதவி தேவைப் படுவது சரியாகப் படவில்லை.அதை விட அவனை பலநாட்களாக இவள் கவனித்து வருவதும் ஒரு காரணமாகும்.எப்போது மதிய உணவுக்குப் போகும் போதும் அவன் தன்னை நோட்டம் விடுவதையும், தான் பார்த்ததும் முகத்தை திருப்புவதையும் அவள் அவதானித்து வந்திருக்கிறாள்.தனக்குள்ளே இவனைப் பற்றி அறிய வேண்டும் என்றும் ஒரு ஆவல் எத்தனையோ முறை எழுந்தும் தனக்கே உரிய அடக்கத்துடன் அந்த எண்ணத்தைப் பின் போட்டு வந்தாள்.
இன்று அவனது ஸ்பரிசம்,அவனது உதவும் தன்மை,அவனது கனிவான பேச்சு,எல்லாமே மரியாதைக்கு உரியனவாக இருந்தாலும்
அவனது மனத்தைக் கவரும் அழகான  தோற்றம் .அவனது கண்களில் இருந்த ஏதோ ஒரு மாய சக்தி ,அவளை அவன் பார்த்த பார்வைகள் போன்றவை  அவனை நெருங்குவது சரியா என்ற கேள்வியைத்தான் அவளுக்கு எழுப்பின.
அவன் பார்வையில் மறைந்ததும் தனது காரைத்தேடி போனவளுக்கு இன்னொரு ஆச்சரியம்  காத்திருந்தது.

தொடரும்..........!

Thursday, January 14, 2016

UNNAI ARINTHAAL.......CHAPTER-1



உன்னை அறிந்தால் ........!
பாகம் -1
கனடாவில் குளிர் என்பது எல்லோருக்குமே பழகிப் போன ஒரு விடயம்.எல்லோருக்கும் பனிகாலத்தில்
எவரது பேச்சு வார்த்தையையும் தொடக்கவும்,இடையில் எதைப் பேசுவது என்று தெரியாமல் திண்டாடும்  போது வந்து கை கொடுக்கும் ஒரு அற்புதமான ஒரு ஆயுதம் என்றும் சொல்லலாம்.
இன்றைக்கும், நிலா, வெளியே கொட்டும் பனியைப் பார்த்து ரசித்துக் கொண்டே பக்கத்தில் தன்னோடு வேலை செய்து கொண்டு இருக்கும் சக வங்கி ஊழியர் ரிச்சர்ட் (Richard ) இடம் ஆங்கிலத்தில் வேலைக்கு இடையிலும்  பனியைப் பற்றித்தான் அளவளாவிக் கொண்டிருந்தாள்.இரண்டு மூன்று நாளாகப் பனி பெய்வதும்  விடுவதுமாக இருந்தது.ஆனாலும் அதைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் மட்டும்  எப்போதுமே புதிதாகவும் ,சுவாரசியமாகவும் இருந்ததன.. இந்தப் பனிக்கு அப்படி ஒரு சக்தி ! அதனது ரசிகர்களின் எண்ணிக்கை , நமது இந்தியத்  தமிழ் நாட்டு நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை விட  அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.!!
இருவரும் தமது வேலைகளைச் செய்து கொண்டே இடைக்கிடையே அரட்டை அடிப்பதும் .நல்ல நண்பர்களாகப் பேசுவதும் வழமையாக  அங்கு நடக்கும் விடயம். இது இவர்கள் மட்டுமல்ல எந்த அலுவலகங்களிலும் பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் ஊழியர்களின் வழமையான போக்கும் தான்..ஆனால் தமது மேலதிகாரிகள் வந்தாலோ ,சிலவேளை நோட்டம் விட்டாலோ ,நல்ல ஊழியர்களாக மாறி , பெட்டிப் பாம்புகள் மாதிரி அடங்குவதும் கூட வழமையாக நடக்கும் விடயம் தான் என்றால் மிகையாகாது.
 இன்றைய நாளும் இருவருக்கும் விதிவிலக்கல்ல..நிலா  சொன்னதைக் கேட்டு  அவனும் பதிலுக்கு  ஆமோதிப்பது போல பார்க்க அழகாக இருக்கும், பனியின் அழகையும் அதே வேளையில் அது உறையும் போது அதில் காலை வைத்து நடக்கும் போது வரும் விளைவுகளையும் விமர்சித்து அவளது அழகுணர்ச்சிக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைத்தான்.அவளும் அவன் சொல்வதை அமோதித்து அவர்கள் இருவருமே தமது வேலையைத் தொடர்ந்து செய்தனர்.
வேலை முடிய, வழக்கம் போல  மாலை ஐந்து மணி யாகி விட்டது.நிலா  எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட ஆயத்தமானாள்.
பனிகாலத்தில் கனடாவில், வீடுகளும்,காரியாலயங்களும்,கடைகளும் எப்போதுமே சுவாத்தியத்துக்கு ஏற்றபடி சூடேற்றப்பட்டு  மனிதர்களுக்கு சௌகரியமாகவே இருப்பது மிகவும் சந்தோஷப் படவேண்டிய விடயம்.
ஆனால், இந்த இடங்களை விட்டு வெளியே செல்லும் போது  சுவாத்தியத்துக் கேற்ப, உடை கள் அணிந்து சிரம்  முதல்  பாதம் வரை மூடிப் பாதுகாத்து போகாவிட்டால் அதனால் வரும் விளைவுகள் மிகவும் மோசமானவை என்பது   இங்கு வசிக்கும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதனால் அதற்கு ஏற்ப எல்லோருமே பனிகாலத்துக்கு வேண்டியவற்றை,  அதற்கு முதல் வரும் இலையுதிர்காலத்திலும் வசந்த காலத்திலும் தயாராகிக் கொள்ளுவார்கள். தயாராகிப்   பல  விடயங்கள் செய்து கொள்ளுவார்கள்.
அதில் உடை வகைகள்  ,காலணிகள்,மோட்டார்வண்டிகளில் சில்லு மாற்றுதல் ,வாசலில் போடுவதற்கு  உப்பு வாங்கி வைப்பது , என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
.நிலா  காரியாலயத்தை விட்டு தனது மோட்டர் வண்டி தரித்து நிற்கும் இடத்துக்கு போவதற்காக கட்டிடத்தை விட்டு   நீங்கினாள். அப்போது ,ரிச்சர்ட் சொன்னது உடனே ஞாபகம் வந்தது.எவ்வளவு கவனமாக கொட்டிக் கிடக்கும் பனியில் காலை வைக்க வேண்டுமென்று   நினைத்துக் கொண்டு மெல்ல,  புதிதாக ,அழகாக விழுந்து, வெள்ளை வெளேரென்று பஞ்சுக் குவியலாய்  காரியாலய வாசலில் ஓரடி ஆழத்துக்கு கொட்டிக் கிடந்த
பனிக்குள் ,பஞ்சு மிட்டாயைக் கண்ட,  கள்ளமில்லாத குழந்தையைப் போல் பனியை ரசித்துக் கொண்டே  ஓரடி ஆழத்துக்கு  நிலத்தில் விழுந்து இருந்து பனிக்குள் காலை வைத்தாள் .
அவ்வளவுதான் மறுநிமிடம் ,இத்தனை கவனமாக காலை வைத்தும்  எப்படி வழுக்கி  விழப்பார்த்தாளோ   ஆண்டவனுக்குத்தான் தான் வெளிச்சம்!
அதற்குள் அவளைக் கெட்டியாக இரண்டுகரங்கள் அப்படியே அணைத்து தூக்கி நிறுத்தின.நிலா  திகைத்து திரும்பிப் பார்த்த போது அவளது கண்களையே அவளால் நம்ப முடியவில்லை........!
                                                                                                                                                                                                                                                                  தொடரும் .........!